ஆண்டாள் நள வருஷம், ஆடி மாதம், பூர நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் நந்தவனத்தில், துளசிச் செடியின் கீழே, பூமிதேவியே குழந்தையாக அவதரித்தாள். மலர் பறிக்கச் சென்ற பெரியாழ்வார், குழந்தையை எடுத்து "கோதை" என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார்.
கோதை சிறுவயது முதலே கண்ணனிடம் தீவிர பக்தியும், காதலும் கொண்டாள். தன் தகப்பனார் பெருமாளுக்கு தொடுத்து வைத்துள்ள மலர் மாலைகளை அவருக்குத் தெரியாமல் அணிந்து பார்த்து, பின்னர் கோயிலுக்குக் கொடுத்து அனுப்பினாள். ஒருநாள் இதைப் பார்த்துவிட்ட பெரியாழ்வார், அந்த மாலையை இறைவனுக்கு சாற்றாமல் விட்டுவிட்டார். அன்றிரவு பெருமாள் அவர் கனவில் தோன்றி, கோதை அணிந்த மாலையே தமக்கு விருப்பம் என்று மலர்ந்தருளினார். அன்று முதல் கோதை "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்று அழைக்கப்பட்டார். கோதை எம்பெருமானையே தன் விருப்பப்படி ஆண்டதால் "ஆண்டாள்" என்று பெயர் பெற்றாள்.
ஆண்டாள் பருவ வயதை அடைந்ததும் பெரியாழ்வார் அவளை கண்ணனுக்கு எவ்வாறு மணம் செய்து வைப்பது என்று வருத்தம் அடைந்தார். திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதப் பெருமாள் பெரியாழ்வார் கனவில் தோன்றி ஆண்டாளை தனது சன்னதிக்கு அழைத்து வரச்சொல்லி, அவளை தாம் மணம் புரிய போவதாகக் தெரிவித்தார். அவ்வாறே, பெரியாழ்வாரும் ஆண்டாளை அரங்கன் சன்னதிக்கு அழைத்து வர, ஆண்டாள் திருவரங்கனோடு ஐக்கியமானாள். மகளைப் பிரிந்து வருந்திய பெரியாழ்வாரை வில்லிபுத்தூருக்குத் திரும்பச் சென்று அங்கு தொடர்ந்து திருத்தொண்டு புரியும்படி பெருமாள் ஆணையிட்டார். பெரியாழ்வாரும் அவ்வாறே செய்து பரமபதம் அடைந்தார்.
ஆண்டாள் 30 "திருப்பாவை" பாசுரங்களையும், 143 "நாச்சியார் திருமொழி" பாசுரங்களையும் சேர்த்து 173 பாசுரங்களை அருளினார். இப்பொழுதும் ஒவ்வொரு மார்கழி மாதமும் திருப்பாவை சிறப்பாக ஓதப்பட்டு வருகிறது.
|